JavaScript is required
Relief and recovery support is available for people impacted by the January 2026 Victorian bushfires.
Visit Emergency Recovery Victoria

மழலையர் கல்வி எப்படி வேலை செய்கிறது (How kinder works) - தமிழ் (Tamil)

மழலையர் கல்வி (Kinder) என்பது, 'மழலையர் பள்ளி' ('kindergarten')அல்லது 'ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி' ('early childhood education') என்றும் குறிப்பிடப்படுகிறது, இது உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் கற்றலின் முக்கிய பகுதியாகும். 3 வயதில் ஒரு தரமான மழலையர் கல்வித்திட்டத்தைத் தொடங்குவது அவர்கள் வாழ்விலும் பள்ளியிலும் சிறப்பாகச் செயல்படத் தேவையான திறன்களை வளர்க்க உதவ முடியும்.

உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை நீங்கள் தொடக்க வயது கணிப்பானில் (Starting Age Calculator) உள்ளீடு செய்து, அவர்கள் எந்த ஆண்டில் மூன்று மற்றும் நான்கு வயதினருக்கான மழலையர் திட்டத்தை தொடங்கலாம் என்பதைக் கண்டறியலாம்.

ப்ரீ-ப்ரெப் விரைவில் வருகிறது

2025 இல் இருந்து நான்கு வயதினருக்கான மழலையர் பள்ளி ப்ரீ-ப்ரெப் ஆகிறது.

2026 ஆம் ஆண்டில், பின்வரும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 25 மணிநேரம் வரை ‘ப்ரீ-ப்ரெப்’ (Pre-Prep) கல்வி கிடைக்கும்:

  • அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்
  • ஆபொரிஜினிப் பழங்குடியினர் மற்றும்/அல்லது டோரஸ் நீரிணைத் தீவுவாசி என அடையாளம் காணவும்
  • ‘குழந்தைப் பாதுகாப்பு’(child protection)டன் தொடர்புகொண்ட குடும்பத்தினர்

நான்கு வயதினருக்கான மழலையர் பள்ளி மற்றும் ப்ரீ-ப்ரெப் இரண்டிலும் வழங்கப்படும் திட்டத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ப்ரீ-ப்ரெப்பில் குழந்தைகள் கற்கவும் விளையாட்டு மூலம் பிறருடன் பழகவும் அதிக நேரம் வழங்கப்படுகிறது. இது தனிப்பட்ட (அமர்வுகள் மூலம்) மழலையர் பள்ளி மற்றும் நீண்ட பகல் பராமரிப்பு மையங்கள் மூலம் வழங்கப்படும்.

ப்ரீ-ப்ரெப் மற்றும் மூன்று வயதினருக்கான மழலையர் பள்ளி ஆகிய இரண்டும் இலவச மழலையர் கல்வியின் பகுதிகளாகும். இலவச மழலையர் கல்வி குறித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

மழலையர் பள்ளி நேரம்

நிதியுதவி பெற்ற மூன்று வயதினருக்கான மழலையர் பள்ளித்திட்டங்கள் வாரத்திற்கு 5 முதல் 15 மணிநேரங்களுக்குக் கிடைக்கின்றன. நிதியுதவி பெற்ற நான்கு வயதினருக்கான மழலையர் பள்ளித்திட்டங்கள் வாரத்திற்கு 15 மணிநேரங்களுக்குக் கிடைக்கின்றன. ப்ரீ-ப்ரெப் திட்டங்கள் 2026 இல் இருந்து படிப்படியாக 25 மணிநேரத்திற்கும், 2028 இல் இருந்து 30 மணிநேரங்கள் வரையும் அதிகரிக்கும்.

நிரூபிக்கப்பட்ட முடிவுகள்

மழலையர் திட்டத்திற்குச் செல்லும் குழந்தைகள் எண்களை எவ்வாறு எண்ணுவது, மற்றும் இலக்கங்களையும், எழுத்துக்களையும் எவ்வாறு அடையாளம் காண்பது, அத்துடன் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். உங்கள் குழந்தை மழலையர் திட்டத்தில் தங்கள் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் வளர்த்து, சமூக மற்றும் உணர்ச்சித் திறன்களைக் கற்றுக்கொள்ளும். அவர்கள் பிறருடன் விரும்பிப் பழகி, புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.

16 வயதாகும்பொழுது, பள்ளி ஆரம்பிக்கும் முன்பு 2 அல்லது 3 ஆண்டுகள் மழலையர் பள்ளித்திட்டத்திற்குச் சென்ற மாணவர்கள் செல்லாதவர்களைவிட ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

பெற்றோர்களும் மழலையர் திட்டக் கல்வியாளர்களும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள்

பெற்றோர்கள்/ பராமரிப்பாளர்கள், குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையேயான கூட்டாண்மையாக மழலையர் கல்வி சிறப்பாகச் செயல்படுகிறது. ஒரு பெற்றோர்/ பராமரிப்பாளராக, உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் நீங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். தவறிலிருந்து சரியானது எது என்பதையும், உங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் இரக்க குணம், மரியாதை போன்ற விழுமியங்களையும் (values) நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள். மழலையர் திட்டத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், மற்றும் உங்கள் குழந்தை வீட்டில் தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கு உதவுவதற்கான வழிகள் பற்றியும் ஆசிரியர்கள் உங்களுடன் பேசுவார்கள். அவர்கள் உங்கள் குழந்தையின் ஆர்வங்கள் பற்றியும், மற்றும் அவர்கள் எப்படி கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

எந்த நேரத்திலும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யும்படி உங்கள் மழலையர் திட்ட ஆசிரியரை நீங்கள் கேட்கலாம். இது வளாகத்தில் நேரடியாகவோ, அல்லது தொலைபேசி அல்லது காணொளி மூலமாகவோ இருக்கலாம். இந்தச் சேவையைப் பெற குடும்பங்களுக்கு எந்தச் செலவும் இல்லை.

மழலையர் திட்டத்தில் என்ன நடக்கிறது

விளையாட்டு மூலம் குழந்தைகள் கற்பதை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். வரைதல், பாடுதல், ஏறுதல், தோண்டுதல் மற்றும் வெளியிடங்களில் ஓடுதல், பொம்மைகளுடன் விளையாடுதல் மற்றும் புத்தகங்களைப் படித்தல் போன்றவை செயல்பாடுகளில் அடங்கும். பகிர்ந்துகொள்வதன் மூலமும், சுழற்சி முறையைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கும்போது, குழந்தைகள் தங்களின் கற்பனையைப் பயன்படுத்தவும், கண்டுபிடிப்புகளைச் செய்யவும் விளையாட்டு ஊக்குவிக்கிறது. எவ்வாறு ஆங்கிலம் பேசுவது மற்றும் புரிந்துகொள்வது உட்பட ஒலிகள், வார்த்தைகள் மற்றும் மொழியைப் பற்றிக் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.

மழலையர் நமது பன்முகக் கலாச்சாரச் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்

தங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க, அனைத்து பின்னணியில் இருந்து வரும் பெற்றோர்களை மழலையர் திட்டங்கள் வரவேற்கின்றன. பெற்றோர்கள் சந்தித்துக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கும் ஓர் இடம் உள்ளது.

ஆசிரியர்கள் உங்கள் குழந்தை மற்றும் உங்கள் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். கலாச்சார நாட்கள் மற்றும் நிகழ்வுகள், மேலும் விக்டோரியாவின் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவது உட்பட, உங்கள் குழந்தைக்கு அர்த்தமுள்ள திட்டங்களைத் தயாரிக்க இது அவர்களுக்கு உதவுகிறது.

செயல்பாடுகளில் ஆசிரியர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்கிறார்கள், எனவே ஆங்கிலம் பேசாத குழந்தைகளுக்கு மற்றவர்களைப் போலவே விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் அதே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன. சில மழலையர் திட்டங்களில் இருமொழிக் கல்வியாளர்கள் உள்ளனர், அவர்கள் ஆங்கிலம் குறைவாகப் பேசும் அல்லது ஆங்கிலமே பேசாத குழந்தைகளுக்கு உதவுகிறார்கள். குழந்தைகள் சேர்ந்து பழகவும், மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும், மேலும் கலாச்சார வேறுபாடுகளை மதிக்கவும் கற்பிக்கப்படுகிறார்கள்.

மழலையர் பள்ளித் திட்டங்களின் வகைகள்

குழந்தைகள் மூன்று வயதினருக்கான மழலையர் பள்ளித்திட்டத்தை ஒரு நீண்ட பகல்நேரப் பராமரிப்பு மையத்திலோ (குழந்தைப் பராமரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது) அல்லது ஒரு தனிப்பட்ட மழலையர் பள்ளிச் (அமர்வு மூலம் என்றும் அழைக்கப்படுகிறது) சேவையிலோ எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சேவைகள் பொதுவாக நான்கு வயதினருக்கான மழலையர் பள்ளித்திட்டத்தையும் வழங்குகின்றன.

ஒரு நீண்டநேரப் பகல் பராமரிப்பு மையமானது, ஒரு மழலையர் திட்டம் உட்பட ஒரு முழு நாள் கல்வி மற்றும் பராமரிப்பை வழங்க முடியும். ஆசிரியர் தலைமையிலான மழலையர் திட்டத்தைக் கூடுதல் நேரக் கல்வி மற்றும் பராமரிப்புடன் ஒருங்கிணைக்க முடியும்.

ஒரு தனியான சேவையில், ஒரு மழலையர் கல்வித் திட்டம் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படும். ஒரு தனியான சேவையானது பொதுவாக ஆண்டுக்கு 40 வாரங்கள் பள்ளிக் காலத்தின் போது இயங்கும் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை உள்ள அதே நேரத்தில் விடுமுறை அளிக்கும். இந்த நாட்களும், நேரங்களும் மழலையர் கல்விச் சேவையால் அமைக்கப்பட்டுள்ளன.

Updated